×

கள்ளச்சாராயம் அல்ல; விஷ சாராயம்- டிஜிபி விளக்கம்

 

மரக்காணத்தில் 14 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது சாராயம் அல்ல மெத்தனால் என டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததில் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் 10 பேரும், மரக்காணம் சம்பூவெளியில் ஒருவர், மரக்காணம் நகரான் தெரு பகுதியை சேர்ந்த ஒருவர், மரக்காணம் செல்லன் தெருவில் ஒருவர் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூபாய் பத்து லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். 

இந்நிலையில் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சைலேந்திர பாபு, “மரக்காணத்தில் 14 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது சாராயம் அல்ல மெத்தனால். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை குடித்ததே உயிரிழப்புக்கு காரணம். மெத்தனால் என்ற விஷ சாராயத்தை விற்பனை செய்த சாராய வியாபாரி ஒதியூரை சேர்ந்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில் தொழிற்சாலைகள் இருந்து விஷ சாராயத்தை திருடி விற்றுள்ளனர். சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணாத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்தில் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவில் தடுக்கப்பட்டதால் ஆலைகளில் பயன்படுத்தும் மெத்தனாலை விற்பனை செய்துள்ளனர்.  கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம், செங்கல்பட்டில் கைப்பற்றப்பட்ட சாராயம் மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல. மெத்தனால் என்ற விஷ சாராயம். 2022 ஆம் ஆண்டு 1.41 லட்சம் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1.40 லட்சம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு இதுவரை 55,474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுளனர்” எனக் கூறியுள்ளார்.