×

"ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசு" - தினகரன் கண்டனம்!!

 

நியாய விலைக்கடைகள் எவ்வித சிரமமுமின்றி இயங்குவதற்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாத காரணத்தினால் செலவினங்களை சமாளிக்க முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் திணறி வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் மானியத் தொகை மூலமாகவே நியாய விலைக்கடைகளின் வாடகை, பணியாளர்களுக்கு ஊதியம், பணிக்கால பயன்கள், மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவை தொகையில், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.225 கோடியும் தற்போதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதால் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் நியாய விலைக்கடைகள் எவ்வித சிரமமுமின்றி இயங்குவதற்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.