காந்தி உடன் ஓபிஎஸ்யை ஒப்பிட வேண்டாம்; அவர் நாடகத்தை நம்ப தயாராக இல்லை- திண்டுக்கல் சீனிவாசன்
ஓபிஎஸ் நீலி கண்ணீரை கண்டு ஏமாற மாட்டோம் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசத்தை இன்று வங்கியில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் கடந்த 25 ஆம் தேதி வங்கியிலிருந்து பசும்பொன்னுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வங்கியில் ஒப்படைப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடத்தில் தங்கக் கவசத்தை ஒப்படைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “பசும்பொன்னில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டது எங்களுக்கு தெரியாது. ஊடகத்தின் வாயிலாக தான் பிரச்சினை தெரியவந்துள்ளது, ஏதோ இரண்டு காவாலி பயலுக கல்லை விட்டு எறிந்து இருப்பார்கள், ஓ.பன்னீர்செல்வம் ஏன் இரட்டை இடம் போடுகிறார்? ஓபிஎஸ் தொட்டிலையும் ஆட்டி விட்டு பிள்ளையும் கிள்ளி விடுகிறார். இந்த நாடகம் எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது. அதிமுகவில் ஓபிஎஸ் இன் வேஷம் எடுபடாது. ஓபிஎஸ் ஏற்கனவே பல தோல்விகளை சந்தித்துள்ளார்.
வாகனத்தின் மீது யார் கல் எறிந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் மகாத்மா காந்தியை போல் ஓபிஎஸ்-ஐ ஒப்பிட வேண்டாம். ஏற்கனவே ஓபிஎஸ் இடம் இந்த மாதிரி பல நீலி கண்ணீர் நாடகங்களை பார்த்து உள்ளோம். ஓபிஎஸ்- இன் நாடகத்தை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. கோட்சே மகாத்மா காந்தியை சுட்டது சரிதான் என்பது போல் உள்ளது. பசும்பொன் வந்த எடப்பாடிக்கு முதல்வருக்கு வழங்கிய பாதுகாப்பு போல் உரிய பாதுகாப்பு காவல்துறையால் கொடுக்கப்படவில்லை. முதலமைச்சர் சென்ற பிறகு காவல்துறையிடம் கட்டுப்பாடு அங்கு இல்லை அதனால் தான் அச்சம்பவம் நடந்துள்ளது. பவுன்சர்களின் பாதுகாப்புடன் தான் எடப்பாடி பசும்பொன்னொற்கு வந்தார்.” எனக் கூறினார்
எடப்பாடி கே.பழனிச்சாமி பிரதமராக தகுதி உள்ளதாக செய்தியாளர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டதற்கு அண்ணாமலை சிரித்து இருக்கிறார் என செய்தியாளர் கேட்டதற்கு அண்ணாமலையிடம் செய்தியாளர் கேட்ட கேள்வியே மிக கேவலமான கேள்வி, “அதிமுகவின் இலக்கு 2026-ல் எடப்பாடி கே.பழனிச்சாமியை மீண்டும் முதல்வர் ஆக்குவதுதான்” என்றார்.