“No Comments before தவெக மாநாடு”- திண்டுக்கல் சீனிவாசன்
விஜய் மாநாட்டில் அண்ணா படம் தவிர்க்கப்பட்டது குறித்து தெரியவில்லை, No comments before Manadu. After Manadu we will tell something என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014ல் அளித்த ரூ.4.5 கோடி மதிப்பிபான 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் பாங்க் ஆப் இந்தியா வாங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அக்.30 அன்று தேவர் ஜெயந்தியன்று சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெற்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். காவல்துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் தங்கக்கவசம் நவம்பர் 1 அன்று மீண்டும் வங்கி பெட்டகத்தில் வைக்கப்படும்.
இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “2026 தேர்தலில் எல்லா கட்சியும் தனித்து நிற்க தயார் என்றால் அதிமுக முதலில் ரெடியாக இருக்கும். தேர்தல் நேர சூழலை பொறுத்தே இதை முடிவு செய்ய முடியும். எடப்பாடி பழனிச்சாமி குறித்து தொண்டன் கூட விமர்சிக்கலாம், ஆனால் டிடிவி தினகரன் விமர்சிப்பதற்கு தகுதி இல்லை. அவர் தனியாக ஒரு கட்சி நடத்திக் கொண்டிருப்பவர். விரைவில் திமுக கூட்டணி உடையும். விஜய் மாநாட்டில் அண்ணா படம் தவிர்க்கப்பட்டது குறித்து தெரியவில்லை. No comments before Manadu After Manadu we will tell something” என்றார்.