×

விஜய் மாநாட்டுக்குப் பின் கூட்டணி பெற்றி முடிவு- பிரேமலதா விஜயகாந்த்

 

விஜய் மாநாடு நடத்தி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர் தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அமெரிக்காவில் முதலமைச்சர் சைக்கிள் ஒட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். ஆனால், எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தனர், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என தெரியவில்லை. மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும். அவற்றிற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.


பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்க கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவாக உள்ளது.


விஜயின் Goat படத்திற்கு வாழ்த்துக்கள். விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்சனை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. விஜய் மாநாடு நடத்தி, கட்சி துவங்கி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர் தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும். முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் ரூ.5000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன்? அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம்” என்றார்.