×

அதிமுக பெண் கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்குதல்- தட்டிக்கேட்ட எம்.எல்.ஏக்கள் கைது 

 

மேட்டுப்பாளையம் நகர மன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்சனைக்கு கேள்வி எழுப்பிய அதிமுக பெண் கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், அதை எதிர்த்து போராடிய 8 கவுன்சிலர்கள் உட்பட இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டம் கடந்த திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டம் துவங்கி சிறிது நேரத்தில் நகர் பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் பிரச்சனையை கிளப்ப திமுக கவுன்சிலர்கள்- அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் உருவானது. இதனால் நகர மன்றத்தின் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு அனைத்து தீர்மானங்களும்  நிறைவேறியதாக கூறி நகர மன்ற தலைவர் தனது அறைக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே அதிமுக கவுன்சிலர்கள்- திமுக கவுன்சிலர்கள் நோக்கி தகாத வார்த்தையில் பேசியதாக திமுக கவுன்சிலர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல் அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்களை தங்களை தாக்கியதாக கூறி புகார் அளித்துள்ளனர். இருதரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் நாற்காலியை தூக்கி எறிந்து தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மூன்றாவது நாளாக நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ. கே. செல்வராஜ் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி .ஆர். ஜி. அருண்குமார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். இதற்கு அனுமதி அளிக்காத மேட்டுப்பாளையம் போலீசார் 2 எம்எல்ஏக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 8 அதிமுக கவுன்சிலர்களும்  வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர்