×

வன்னியர் வசம் இருந்த உதயசூரியன்... திமுக போராடி வென்ற வரலாறு

 

திராவிட முன்னேற்றக் கழகம் 1949ல் அறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க கட்சி. இக்கட்சி அடுத்த 15 ஆண்டுகளில் ஆட்சியை கைப்பற்றியது. மனித வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் இனம் - மொழி விடுதலைக்காவும் மாநில உரிமை காக்கவும் தோற்றுவிக்கப்பட்ட திமுகவின் கொடி கறுப்பு- சிவப்பு எனும் இருவண்ண கொடி. சின்னம் உதயசூரியம்... இவற்றின் வரலாறை பார்க்கலாம்.

அரசியலில் தேர்தல் என வரும்போது கொடியும், சின்னமும்தான் மக்கள் மனதில் இடம்பெறும். அந்த வகையில் கறுப்பு- சிவப்பு எனும் இரு வண்ணங்களில் உருவாக்கப்பட்டது திமுக கொடி. கறுப்பு நிறம் என்பது அரசியல், பொருளாதார, சமுதாய வாழ்வில் உள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அடையாளம். சிவப்பு நிறம் அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் குறியீடு. இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். இருண்ட வானில் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் என்ற கருத்துடன் கொடியில் கறுப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது. இரவெல்லாம் இருண்டிருக்கும் உலகத்திற்கு, அடிவானத்தில் தோன்றுகிற உதயசூரியன் எப்படி ஒளி ஏற்றுகிறதோ அதேபோன்று திமுக இருண்டு கிடக்கும் அனைவரது வாழ்விலும் கருமையை அகற்றி ஒளியேற்றும் என்பதை உணர்த்தவே இக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 1958 மார்ச் 2- ஆம் தேதி, தேர்தல் கமிஷனால் தி.மு.க மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கட்சி அங்கீகாரம் பெறும்போது ஒதுக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக இழக்காத ஒரே கட்சி திமுக தான். ஆனால் திமுகவுக்கே ஒருமுறை உதயசூரியன் சின்னத்தை இழக்கும் சூழ்நிலை வந்தது. 1993 ஆம் ஆண்டு வைகோ திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது, கட்சியிலும் சின்னத்திலும் எனக்கு பங்கு உண்டு என போர்க்கொடி தூக்கினார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கு அங்கீகாரம் வழங்கி கட்சி அதற்கே சொந்தம் என அறிவித்தது.

இப்படி கருணாநிதி போராடி வென்ற உதயசூரியன் வேறொருடைய சின்னம் என சொன்னால் நம்ப முடியுமா? ஆம்... உதயசூரியன் சின்னம் திமுகவுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன்பே 1948 ஆம் ஆண்டு வன்னியர் குல சத்திரியர் கட்சி எனும் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி படையாச்சியிடம்தான் இருந்தது. பின்னர் அது, 'தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி'யாக 1951-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன் தலைவராக ராமசாமி படையாச்சியும், செயலாளராக கோவிந்தசாமி படையாச்சியும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் ராமசாமி படையாச்சி காங்கிரசிம், கோவிந்தசாமி படையாச்சி திமுகவிலும் இணையவே, உழைப்பாளர் கட்சி கலைக்கப்பட்டது. அதன்பின் கோவிந்தசாமி படையாச்சி உழவர் கட்சியை தோற்றுவித்து, தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்ட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், உழவர் கட்சியின் சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பலர் வெற்றி பெற்றனர். தி.மு.க-வைச் சேர்ந்த அன்பில் தர்மலிங்கம் உள்பட சிலரும், அண்ணாவின் பரிந்துரையைப் பெற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாடு, வாக்குசேகரிப்பு என பல இடங்களில் உதயசூரியனை முன்னிலைப்படுத்திய திமுக, கோவிந்தசாமியின் அனுமதியுடன் உதயசூரியனை தன் சின்னமாக்கியது. தேர்தல் ஆணையமும் அதற்கு அங்கீகாரம் கொடுத்தது.