×

தமிழகத்தில் ரோடு ஷோ நடத்திய பாஜகவை மக்கள் நடுரோட்டில் விட்டனர்- உதயநிதி ஸ்டாலின்

 

தமிழகத்தில் ரோடு ஷோ நடத்திய பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நடுரோட்டில் விட்டு விட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சி்த்துள்ளார்.

ஆழி பதிப்பகம் சார்பில் தேர்தல் 2024:மீளும் 'மக்கள்' ஆட்சி நூல் வெளியீடு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள மாநகராட்சி அரங்கில் நடைபெற்றது. இதில் இளைஞர் நாள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட அரசியல் செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் முதல் பிரதியை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  ஆளூர் ஷாநவாஸ், பத்திரிகையாளர்கள் ஜென்ராம்,விஜயசங்கர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார். ஆழி பதிப்பகம் செந்தில் நாதன் ஏற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த புத்தகத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறேன். நானும் ஒரு பதிப்பாளர் தான் அதன் அடிப்படையில் தான் என்னை அழைத்தீர்கள் என்று நினைக்கிறேன்.கடந்த தேர்தலில் 22 நாட்கள் 9000 கிலோ மீட்டர் பயணம் செய்து 125 பிரச்சார கூட்டங்களில் கலந்து மக்களிடம் வாக்கு சேகரித்தேன்.அதில் இரண்டு முக்கியமான விஷயங்களை கவனித்தேன், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, இதற்கு  மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இரண்டாவது பாசிச அரசிடம் மக்களுக்கு கடும் கோபம் உள்ளது. நிதி உரிமை, மாநில உரிமைகளை பறிக்கின்ற போக்கு, இது மக்களிடம் பெரும் கோபத்தை நான் அங்கு பார்த்தேன். தேர்தலுக்குப் பிறகு மோடியின் நடை, உடை மாறியதே தவிர பாசிச சிந்தனைகள் அப்படியே தான் இருக்கிறது.நமது கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்ததற்கு பயந்துவிட்டார்கள், உடனே இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என்று பேச ஆரம்பித்தார்கள்.

மிஸ்டு கால் கொடுத்தால் பாஜகவில் இணையலாம் என்று கூறும் இவர்கள் தற்போது நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு காலை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சங்கீகள்  மோடியை பார்த்து அமெரிக்க, ஐரோப்பா பயப்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆனால் ஆந்திரா சென்றால் அங்கு சொல்லுவார்கள் மோடி எங்கள் சந்திரபாபுவை பார்த்து பயப்படுகிறார் என்று கூறுவார்கள். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தி.மு.க எந்த காலத்திலும் ஏற்காது என்பதை நம் முதலமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார்

பாஜகவால் தமிழகத்தில் கால் வைக்காத சூழல் தான் தற்போது வரை நிலை வருகிறது. நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு 28 பைசா தருகிறது. முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு நிதிகளை மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பாஜக ஓர் இடத்தில் கூட வராததற்கு காரணம் மக்கள் அவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள், மழை வெள்ளத்தின் போது வராத பிரதமர் தேர்தலின் போது எட்டு முறை தமிழக வந்தார். அவர் மட்டுமல்லாமல் பல்வேறு தேசிய தலைவர்கள் தமிழகம் வந்தார்கள், இங்க வந்து தியானம் நடத்தி போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்தார். சினிமாவில் கூட அவ்வளவு கேமராக்கள் வைக்க மாட்டார்கள். தமிழகத்தில் ரோடு ஷோ நடத்திய பாஜகவை தமிழக மக்கள் நடுரோட்டில் விட்டு விட்டார்கள். இந்தியாவை காப்பாற்றுகின்ற பணியில் திமுக எப்போதும் முன் வரிசையில் நிற்கும், கடந்த தேர்தலை விட தற்போது திமுகவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது என்று ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள்” என்றார்.