×

மகளிருக்கு சொத்தில் சமவுரிமை கொடுத்தது கருணாநிதிதான்- உதயநிதி ஸ்டாலின்

 

மகளிருக்கு சமவுரிமை பெற்று தந்தது திராவிட இயக்கமும், திமுகவும்தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


கடலூர் கவுன்சிலர் சரத்- நிவேதிதா திருமணம் புதுச்சேரியில் இன்று நடந்தது. இத்திருமணத்துக்கு தலைமையேற்று  நடத்தி வைத்து பேசிய திமுக இளைஞரணித் தலைவரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “திமுகவின் முதல் பொருளாளரின் கொள்ளுப்பேரனின் திருமணம் இது. ஒரு காலத்தில் மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட உரிமையில்லை.. படிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையை மாற்றி மாற்றத்தை கொண்டு வந்தது திராவிட இயக்கம், திமுக தான்.  மகளிருக்கு சொத்தில் சமவுரிமை என இந்தியாவில் முதலில் சட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதிதான். தற்போது மகளிர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என்ற திட்டம் கொண்டு வந்ததன் மூலம் 520 கோடி முறை பயணம் 3 ஆண்டுகளில் நடந்துள்ளது. மகளிர் இதனால் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கின்றனர். பல திட்டங்களால் உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. காலை உணவு திட்டத்தில் 20 லட்சம் மாணவர்கள் தினமும் பயன்பெறுகின்றனர்.  

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கிய ஓராண்டில்  1.16 கோடி பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் வரை பெறுகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் பணிக்கு செல்லும் பெண்கள் 42 சதவீதமாகவுள்ளனர். மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயரை வையுங்கள்” என்றார்.