×

கலைஞரை போல் அவரின் எழுத்துக்களும் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகின்றன- உதயநிதி ஸ்டாலின்

 

கலைஞர் அவர்களைப் போல, அவரின் எழுத்துக்களும் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்படும் என்ற தித்திப்பான அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்கள். இதன்மூலம், கலைஞர் அவர்களைப் போல, அவரின் எழுத்துக்களும் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகின்றன. இலக்கியம், நாடகம், திரைப்பட வசனம், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், என எழுத்துத் துறையின் எல்லாக் கோணங்களிலும் கோலோச்சியவர் நமது கலைஞர் அவர்கள்.

ரத்தம் தந்து உயிரைக் காப்பது போல - கலைஞரின் பேனா தமிழர்க்கு உணர்வைத் தந்து உரிமைக் காத்தது. கலைஞர் அவர்களின் படைப்புகள் எல்லாம் நூல் உரிமைத்தொகை இல்லாமல் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞர் அவர்களின் நூல்களை இன்னும் அதிகமாக வாசிக்கவும், கலைஞர் அவர்களின் கருத்துக்கள் இன்னும் வேகமாகப் பரவவும், இது மாபெரும் வாய்ப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.