இன்று மாலை திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா.. !
சென்னை நந்தனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது . இந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்.15-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினம், செப்.17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள், அதே செப்.17-ம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு, திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி முப்பெரும் விழாவுடன் சேர்து பவளவிழா ஆண்டாக கொண்டாட திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். மேலும், விழாவில் பாப்பம்மாள் அம்மையாருக்கு பெரியார் விருதும், அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும், கலைஞர் விருது- ஜெகத்ரட்சகனுக்கும், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது- வி.பி.ராஜனுக்கும் வழங்கப்பட இருக்கிறது. பவளவிழா ஆண்டில் புதிதாக மு.க.ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வாகியுள்ள நிலையில், விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.
இதுதவிர, ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் என கட்சியில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். மண்டல அளவில் 4 பேர் வீதம் 16 பேருக்கு இந்த பணமுடிப்பு வழங்கப்படுகிறது. விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தென்சென்னைதெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிமணியன் வரவேற்புரை ஆற்றும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த விழாவில், தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் விழாவை முழுமையாக காணும் வகையில் பெரிய அளவிலான டிஜிட்டல் திரைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவையொட்டி சென்னை அண்ணா அறிவாலயம், அன்பகம் ஆகிய திமுக அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.