திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் பற்றி விவாதிக்கவில்லை- ஆர்.எஸ்.பாரதி
அதிமுக கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் திமுக சரியாகத்தான் செயல்படுகிறது என அர்த்தம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவித்தார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் முதல்வர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக கட்சி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகள் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்டது.
திமுகவின் முப்பெரும் விழாவில் சென்னையில் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதிமுக கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் திமுக சரியாகத்தான் செயல்படுகிறது என்று அர்த்தம். துணை முதலமைச்சர் பற்றி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எந்த வித ஆலோசனையும் நடைபெறவில்லை” என்றார்.