AI தொழில்நுட்பத்துடன் திமுகவின் முப்பெரும் விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
ஒரு லட்சம் பேர் அமரும் வகையில், AI தொழில் நுட்பத்துடன் நடத்தப்படவுள்ள திமுகவின் முப்பெரும் விழா மாநாடு நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இது 2026 சட்டமன்ற தேர்தலில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கைப்பற்றுவதற்கான அடித்தளமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
தி.மு.க தொடங்கப்பட்டதன் 75-வது ஆண்டான பவள விழா, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ. மைதானத்தில் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திமுக பவளவிழா பலூனை பறக்க விட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் வரிசையில், இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக திமுகவின் பவள விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு முரசொலி பவளவிழா கொண்டாடப்பட்டது. 2018 கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, 2019-ல் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து நடத்தப்பட்ட நன்றி அறிவிப்பு விழா மாநாடு, 2023 மார்ச்-ல் முதல்வரின் 70-ஆம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம், மகளிர் தேசிய மாநாடு என வரலாற்று சிறப்பு மிக்க மாநாடுகள் அனைத்தும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து முப்பெரும் விழாவும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இதற்கு முன்பாக நடைபெற்ற மாநாடுகளை விட பிரமாண்டமாக இம்முறை மாநாடு நடத்தப்படும். 65 ஆயிரம் இருக்கைகளும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் வகையிலும் நிகழ்ச்சி இருக்கும். பவள விழாவையொட்டி 75 அடி உயர திமுக கொடி பறக்கவிடப்படவுள்ளது. திமுக சாதனைகள் குறித்த கண்காட்சிக்கும் , மாநாட்டிற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், AI தொழில் நுட்ப வசதியும் இந்த மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ளது. 2026-ல் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற முதல்வரின் எண்ணத்திற்கு இந்த மாநாடு அடித்தளமாக அமையும்.” என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.