×

நாடு முழுவது மருத்துவர்கள் வேலைநிறுத்தம் - நோயாளிகள் கடும் அவதி.. 

 

 கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து,  இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில்  ஆக.8 ம் தேதி  இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.  தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சந்தேகத்தின் அடிப்படையில்  சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டர்.  இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்,  இதில்  பலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.  இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும்,  பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும் , மருத்துவர்களும்  நாடு முழுவதும் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் நாடு முழுவதும் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்ததன் பேரில், இன்று (ஆகஸ்ட் 17) காலை 6 மணி முதல் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து  நாளை (ஆகஸ்ட் 18) காலை 6 மணி வரை  மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். 

மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால்   வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தை பொறுத்தவரை  சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பெரும்பாலான  அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்  ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்!