×

 “மதுவிலக்கு மாநாட்டை அரசியலோடு இணைத்து பார்க்காதீங்க..” - திருமாவளவன்...

 

 "மதுவிலக்கு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து, பிணைத்து பார்க்க வேண்டாம்" என முதலமைச்சரை சந்தித்த பின் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

 திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற அக்.2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மதுஒழிப்பு மாநாடு நடத்த உள்ளது.  இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக  தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தோம். முதல் அமைச்சரின் அமெரிக்க பயணத்தில் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இது வரலாற்று சிறப்பு மிக்க பயணம்.  

அக்.2ம் தேதி விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம்.முதலாவது,தமிழ்நாட்டில் அரசு மதுபான கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும்.  இரண்டாவது தேசிய அளவிலான ஒரு கோரிக்கை.  அரசமைப்புச் சட்டம்  உறுப்பு எண் 47 இன் படி படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவிலே  அனைத்து மாநில அரசுகளும் கொண்டுவர வேண்டும் என்பதாகும்.  மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்துகிற போதை மருந்துகள் தவிர,  நுகர்வுக்கான எந்த போதை பொருள்களும் பயன்பாட்டில், புழக்கத்தில் இருக்கக் கூடாது;  அவற்றை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிற ஒரு பிரிவு தான் உறுப்பு எண் 47.  அதனை பேரறிஞர் அண்ணா அவர்களே ஆதரித்து தேசிய அளவிலான ஒரு மதுவிலக்கு கொள்கையை வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

விசிக சார்பில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில்  திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்!  ஆட்சி , அதிகாரத்தில் பங்கு வீடியோ குறித்து முதலமைச்சரிடம் பேசவில்லை. திமுக - விசிக கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை. நெருடலும் இல்லை. நாங்கள் கூட்டணியில் உறுதியாகவே இருக்கிறோம். தேர்தலுக்கும், முதல் அமைச்சருடனான சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆட்சியில் பங்கு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மதுவிலக்கு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து, பிணைத்து பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.