×

விதிமீறும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கை தேவை: துரை வைகோ

 

சிவகாசி பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை மீறும் உரிமையாளர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் செங்கமல பட்டி கிராமத்தில் கடந்த 9-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள்  உயிரிழந்தனர். 14பேர் காயமடைந்தனர். இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்களை தடுக்க மத்திய- மாநில அரசுகள் பல்வேறு சட்ட விதிமுறைகளை புதிது புதிதாக அமல்படுத்தி வந்தாலும், ஒரு சில பட்டாசு ஆலை நிர்வாகங்கள் சட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிகாததன் காரணமாகவே வெடி விபத்து ஏற்படுகிறது. தொடர் விபத்து காரணமாக விதிமுறைக்குட்பட்டு நேர்மையாக செயல்படும் பட்டாசு ஆலை நிர்வாகங்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை உருவாகும். பட்டாசு ஆலைகளில்  விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர்ந்து விதியை மீறும் உரிமையாளர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுப்பதில் எந்த தவறும் இல்லை.


பட்டாசு ஆலை நிர்வாகங்கள் அரசின் விதிமுறையை கடைபிடிக்க வேண்டும். கடந்த 5 மாதங்களில் 11 விபத்துகள் ஏற்பட்டு 28 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கள் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன். 90 சதவீத பட்டாசு ஆலைகள் விதிமுறைகளுக்குட்பட்டு செயல்பட்டு வருகிறது. 10 சதவீத பட்டாசு ஆலைகள் மட்டுமே விதியை மீறுகிறது. தொடர் விபத்துக்களால் அதிகாரிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. விதிமுறையை மீறும் ஆலைகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.