×

"மோடி மதவெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்பது அருவருக்கதக்கது" - வேல்முருகன் 

 

இசுலாமியர்களுக்கு எதிராக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவரும், எம் எல்ஏ வுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே தேசம், ஒரே ஆட்சி, ஒரே பண்பாடு, ஒரே மதம்” என்ற நிலையை நோக்கி வேகமாச் செல்கிறது இந்திய ஒன்றிய அரசு.

மறுபுறம், மதம், சாதி இரண்டையும் தேர்தல் கட்சிகள் பயன்படுத்திகொள்வது வழக்கம் தான். ஆனால் இவ்விரண்டும் இப்போது தீவிரமடைகின்றன.

குறிப்பாக, ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் வளத்தை இசுலாமியர்களிடம் வழங்கும் என்றும் அவர்கள் அதிகம் குழந்தைகளை பெற்றுகொள்வார்கள் என்றும் பேசியிருக்கிறார்.

நீங்கள் (மக்கள்) கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்கு (இசுலாமியர்களுக்கு) கொடுக்க உங்களுக்கு சமதமா? இதை ஏற்றுக்கொள்வீர்களா? என்றெல்லாம் ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் உணராமல், ஆர்எஸ்எஸ் நிர்வாகி போல் பிரதமர் மோடி பேசியிருப்பது என்பது நாட்டின் இறையாண்மைக்கும், மதசார்பின்மைக்கும் எதிரானது.

இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை.

தனது 10  ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க வாக்கற்ற பிரதமர் மோடி, இப்படி தரக்கெட்டு பேசியிருப்பது, உலக அரங்கில் இந்தியா ஒன்றியத்தை வெட்கித் தலைக்குனிய செய்துள்ளது.

குஜராத்தில் இசுலாமிய மக்கள் பலரை கொன்று குவித்தும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இசுலாமியர்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அமல்படுத்தியும், இசுலாமியர்கள் மீதான வெறுப்பும், வன்முறை வெறியும் மோடிக்கு அடங்கவில்லை என்பதை ராஜஸ்தான் தேர்தல் பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நாட்டின் பிரதமர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியிருக்கிறார். 

நாட்டின் இறையாண்மை, அரசியல் சாசனம், மதசார்பின்மையை மதிக்க வேண்டிய ஒரு பொறுப்புமிக்க பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ்–சின் அடிமட்ட தொண்டன் போன்று மதவெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்பது அருவருக்கதக்கது.

எனவே, நாட்டின் இறையாண்மைக்கும், மதசார்பின்மைக்கும் எதிராக பேசிய பிரதமர் மோடி மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.