×

அங்கித் திவாரிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - அமலாக்கத்துறை ரிட் மனு!

 

அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.  

லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின்போது இவருக்கு தொடர்புடைய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டது. 

இந்த நிலையில், அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.  ரிட் மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  அமலாக்கத்துறையும் சிபிஐயும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்- என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் தொடர்புடைய பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என எப்படி தமிழ்நாடு அரசு கூற முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அங்கித் திவாரி விவகாரத்தில் கைப்பற்றிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.