×

கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதற்காக துணை முதல்வர் பதவி கொடுக்கலாமா?- ஈபிஎஸ்

 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேரன், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் என்பதற்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாமா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டுவந்த நிலையில், 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. அம்மா உணவகங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் மூன்றாண்டுகளாக ஆய்வு செய்யவில்லை. தரமான உணவுப் பொருட்கள் இல்லாததால், தரமான உணவு வழங்கப்படுவதில்லை. ஏழை மக்களுக்கு அம்மா உணவகங்கள் வரப்பிரசாதமாக திகழ்ந்தது. தற்போது அம்மா உணவகங்கள் சரியாக செயல்படவில்லை. வேறு வழியில்லாமல், ஆய்வு என்ற பெயரில் முதல்வர் நாடகம் நடத்துகிறார், சென்னை மேயர் இதுவரை எத்தனை அம்மா உணவகங்களில் ஆய்வு செய்துள்ளார்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் 200 நாளில் 595 கொலைகள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்த பின், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.


அதிமுக இணைப்பு குறித்து ஓ.பி.எஸ். சொல்லிக்கொண்டே இருப்பார். அதற்கெல்லாம் விளக்கம் அளிக்கவேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. கருணாநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பதற்காக துணை முதல்வர் பதவி கொடுக்கலாமா? எத்தனை பேர் திமுகவிற்காக உழைத்தார்கள். அனுபவம் வாய்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் இருக்கின்றனர் அவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை? திமுக குடும்ப கட்சியாக ஆட்சியாக மாறிவிட்டது” எனக் கூறினார்.