×

பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பது போல் போதைப்பொருட்கள் விற்பனை- ஈபிஎஸ் வேதனை

 

நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாவணவரின் பையில் கஞ்சா இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு ஆசிரியர் புகார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தவறிய திமுக அரசை கண்டிக்கிறேன் ஏன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் போதைப்பொருள் கேந்திரமாக மாறிவருவதையும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல், சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும் விடியா திமுக அரசை எச்சரித்துள்ளேன். 

நமது அடுத்த தலைமுறையை பாழாக்கும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக காவல்துறையை, எதிர்கட்சியினரை மட்டும் பழிவாங்கும் ஏவல்துறையாக பயன்படுத்தும் விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற, வளமான தமிழகத்தை உறுதிப்படுத்த இனியாவது போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.