×

தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை... கொலை செய்வதற்கான தைரியம் எப்படி வருகிறது?- ஈபிஎஸ்

 

ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு எதிர்க்கட்சதலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.

திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி. மாயாவதி அவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.