×

விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி..!

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக - தேமுதிக தேர்தல் குழுக்கள் மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இருக்கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனை நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. தேமுதிக அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை பிரேமலதா விஜயகாந்த், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தேமுதிக அலுவலகத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, பின்னர் புறப்பட்டு சென்றார். பிரேமலதா அழைப்பின் பேரிலேயே எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக அலுவலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.