×

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!

 

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. இதில் ஜார்கண்ட்டுக்கு நவம்பர் 13, நவம்பர் 20 என இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மகாராஷ்டிராவில் நவம்பர் 20 ம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மொத்தமாக நவம்பர் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் வெளியாக உள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தற்போது ஜார்கண்ட்டில் மட்டும் முதற்கட்டமாக 41 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நவம்பர் 20ம் தேதி ஜார்கண்ட்டில் மீதமுள்ள 40 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜார்கண்ட், மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இருகட்சிகள் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இருகட்சியினர் நட்சத்திர பேச்சாளர்களும் தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் மேற்கொண்டதாக புகார்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் நவம்பர் 11ம் தேதி ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் விதிகளை மீறியதாக பாஜக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்து இருந்தது. அதேபோல் இருமாநிலங்களிலும் நவம்பர் 13ல் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களை விதிகளை மீறி செயல்பட்டதாக காங்கிரஸ் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார்களின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தனித்தனியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் என்பது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு இருதலைவர்களும் விளக்கம் அளிப்பதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது.