×

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம் 

 

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகத்திற்கு, அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தை வழங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 திசைகளை வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பாக தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி முதல் கதவை திறந்துள்ளது. மேலும் முதல் மாநாடு நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் நிர்வாகிகள் அனைவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். தடைகளை தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக வலம் வருவோம். வெற்றிக் கொடி ஏந்தி மக்களை சந்திப்போம். வாகை சூடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.