வைத்திலிங்கம் வீட்டில் தொடரும் ரெய்டு- பின்னணியில் யார்?
கடந்த 2011-2016 ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராகவும் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த வைத்திலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கியதற்காக ரூ. 28 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ், இன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் மற்றும் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் பிரபு, மற்றும் சண்முக பிரபு, உறவினர் பன்னீர்செல்வம், ஆகியோரை இயக்குனர்களாக சேர்த்து முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
இந்நிலையில் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வந்தது. அப்போது பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் 57.94 ஏக்கரில் கூடுதலாக 1453 குடியிருப்புகள் மற்றும் ஐடி நிறுவனங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி கேட்டு சிஎம்டிஏ அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். மூன்று வருடங்களாக அனுமதி வழங்கும் இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அமைச்சர் வைத்திலிங்கம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதற்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இந்த 28 கோடி ரூபாயை தனது மகன் மற்றும் உறவினர்கள் மூலம் லஞ்சமாக பெற்றதும் , அந்த பணத்தில் திருச்சியில் நிலம் வாங்கியதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவர் தொடர்புடைய இடங்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனம், அதன் தொடர்புடைய இடங்களில் சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக முன்னாள் அமைச்சரும் தற்போது ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தங்கியுள்ள சேப்பாக்கம் சட்டமன்ற விடுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் தலைமை பைனான்ஸ் அதிகாரி வீடு, தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள ஸ்ரீராம் சிட் அலுவலகம், மற்றும் அசோக் நகரில், உள்ள ஆடிட்டர் வீடு, திருவேற்காடு அன்னம்மாள் தெரு பகுதியில் உள்ள ஸ்ரீராம் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீடு, கொரட்டூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு நடத்தி வரும் நிறுவனம் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட். இதன் அலுவலகம் அசோக் நகர் 10 வது அவென்யூவில் செயல்பட்டு வருகிறது. இங்கு சோதனைக்காக 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அலுவலகம் வந்து திறக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 3 மணி நேரம் யாரும் வரவில்லை. அதன் பிறகு நிறுவன ஊழியர்கள் வந்து கதவை திறந்தனர். அங்கு சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் செயல்பட்டு வரும் சிஎம்டிஏ அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போதைய காலகட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்துள்ளார். அந்த சமயத்தில் தான் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ. 28 கோடி லஞ்சமாக பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது. அது குறித்த ஆவணங்களை கைப்பற்றுவதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஎம்டிஏ அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆவணங்கள் கேட்டு விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சோதனை நாளை வரை நீடிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.