×

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - இபிஎஸ் கண்டனம்..  

 


திருச்சி என்ஐடி-யில் பாலியல் அத்துமீறல் போன்ற சம்பவங்கள் இனி நிகழாவண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT-Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதுகுறித்து புகாரளிக்க சென்ற மாணவியை காவல் நிலையத்தில் இழிவாக பேசியதாகவும் தகவல் வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களிடம் காவல் துறை இதுபோன்று நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பு, சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் கழிப்பறை பகுதியில் மாணவி ஒருவருக்கு வடமாநிலத் தொழிலாளரால் பாலியல் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. திமுக அரசில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை நான் சுட்டிக்காட்டி வந்தும், இந்த அரசு இதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க திராணியின்றி செயலற்று இருப்பதன் விளைவே இதுபோன்ற சம்பவங்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தண்டிக்கும் நிர்பயா சட்டத்தை, தமிழகத்தில் ஒரு நிர்பயா சம்பவம் நடந்தால் தான் கையில் எடுப்பதாக இந்த திமுக அரசு எண்ணத்தில் இருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்காத, இதுகுறித்து புகார் அளிக்கும் பெண்களை கொச்சைப்படுத்த முயலும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். திருச்சி என்ஐடி-யில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று  பதிவிட்டுள்ளார்.