×

குளறுபடிகளில் சிக்கி திணறும் விடியா திமுக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை - ஈபிஎஸ் கண்டனம்

 

தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளில் சிக்கித் திணறும் விடியா திமுக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயலற்ற தன்மைக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கபட வேடம் புனைவதில் Ph.D., பட்டம் பெற்ற திமுக-வினர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பாய்வது கண்டிக்கத்தக்கது! தமிழகத்தில் தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற திரு. ஸ்டாலினின் விடியா தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில் நடைபெறும் கொடுமைகள் கணக்கிலடங்கா.

கடந்த வாரம் கிண்டி மருத்துவமனையில் நோயாளியின் உதவியாளர் மருத்துவரைத் தாக்கிய சம்பவமும், அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டமும் நடந்தேறியது. இந்நிலையில், அடுத்த நாள் சிகிச்சைக்கு வந்த (விக்னேஷ்) நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் அவர் உயிரிழந்த சோகமும், அதைத் தொடர்ந்து, பாதிப்படைந்த குடும்பத்தினரின் அழுகுரல் காண்போரை கண் கலங்க வைத்தது. மருத்துவர்களின் கோரிக்கையை காலத்தே பரிசீலித்திருந்தால், இந்த நோயாளியின் இறப்பை இந்த அரசு தடுத்திருக்க முடியும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது மருத்துவர்கள் அரசிடம் எடுத்துக் கூறிய நிலையில், மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதால்தான் மருத்துவர்கள் பொங்கி எழுந்ததாகத் தெரிவிக்கின்றனர். 

எனவே, மருத்துவர்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு உரிய உத்தரவாதத்தை அளித்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மருத்துவத் துறையில் தொடர்ந்து நடக்கும் பல விரும்பத் தகாத நிகழ்வுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அடிக்கடி இந்த அரசின் கவனத்திற்கு சுட்டிக்காட்டி வரும் நிலையில், அவைகளைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், எனக்கு முரண்பாடான பதில்களை அளிப்பதிலேயே இந்தத் துறையை கவனிக்கும் மந்திரி மா. சுப்பிரமணியம் குறியாக இருந்து, திறமையற்ற முறையில் செயல்படுகிறாரே தவிர, மக்களின் உயிரைக் காக்கும் பணியில் அக்கறையின்றி இருப்பது வேதனையான ஒன்றாகும். சட்ட விரோதமாக செயல்பட்டு, 'குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூ டியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குவதும், இது கொலைக் குற்றமா? என்று பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த யூ டியூபர் இர்ஃபான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சாதனைத் துறையாக விளங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை, திரு. ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில் சர்ச்சைக்குரிய துறையாக மாறி, நோயாளிகளின் உயிருடன் விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
தவறிழைத்தவர்கள் சாமான்ய மக்களாக இருந்தால் அவர்களுக்கு சட்டத்தை தீவிரமாக கடைபிடிப்பதும், உச்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தால் சட்டத்தை காற்றில் பறக்கவிடுவதுமாக, மக்களைக் காக்கும் மருத்துவத் துறையை சீரழித்து, முதலமைச்சரின் குடும்பத்துக்கு கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே மந்திரிகளாக செயல்படுவார்கள் என்று எழுதப்படாத விதி ஒன்றை பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உருவாக்கி செயல்படுவது சர்வாதிகாரத்தின் உச்சம். தமிழக மக்கள் பொறுமைசாலிகள் மட்டுமல்ல - திறமைசாலிகள்...நேரம் வரும் போது இந்த அராஜக ஆட்சியாளர்களை ஒட ஒட விரட்டி அடிக்கப்போவது திண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.