×

 ‘கொள்கை தீபம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா’ - இபிஎஸ் மரியாதை.. 

 


 பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  

பேரறிஞர் அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்த தினம் இன்று, தமிழ்நாடு முழுவதும் திராவிட கட்சிகளால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்தவகையில்  பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி, சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு  சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.   அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்தவகையில்,  சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  உடன் முன்னாள் அமைச்சர்கள், முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர். 

முன்னதாக அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, “இந்திய நாட்டின் மாநில அரசியல் களங்களில் இன்றுவரை தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் நம் யுகத்திற்கான அரசியல் பாதையை வகுத்துத் தந்த அரசியல் பேராசான் அண்ணா அவர்கள் தான் என்றால் மிகையாகாது. ‘தமிழ்நாடு" என்ற பெருமிதத்தோடு சொல்லும் போதெல்லாம் நம் நினைவில் வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை தீபம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் காண # அண்ணா வழியில் அஇஅதிமுக ஓயாது உழைக்க உறுதியேற்போம். அண்ணா நாமம் வாழ்க !” என்று குறிப்பிட்டுள்ளார்.