விஜய் திமுக, காங்கிரஸில் சேர்ந்திருக்கலாம்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
பொது அறிவும் வரலாறும் தெரியாத ஆளுநர், ராஜ் பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசிக் கொண்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “முழுமையான மதுவிலக்கு வேண்டுமென்றால மக்கள் திருந்த வேண்டும். சட்டத்தினால் மதுவிலக்கை கொண்டு வரமுடியாது. மதுவிலக்கை மாநிலத்தில் அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும். மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குஜராத், பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தியதாக கூறுகின்றனர். ஆனால் அங்கு தான் கள்ளச்சாராயம் அதிகம் உள்ளது.
பாஜக.வுடன் மறைமுக கூட்டணி வைத்த காரணத்தினால் அதிமுகவின் வாக்கு வங்கி 25 % முதல் 30 % சரிந்து விட்டது. விஜய்யை எனது மகனை போல் பார்க்கிறேன். அவரை அனைவரும் தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். விஜய் இப்போது எதற்கு கட்சி ஆரம்பித்திருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் ஆரம்பிக்கும் முன்பு ஒரு மூலக்கருத்து இருக்கும். ஆனால் விஜய் ஆரம்பிப்பதற்கு என்ன மூல கருத்திருக்கு என்று அவருக்கே தெரியவில்லை. விஜய் கொடியில் எதற்கு யானை என்றே தெரியவில்லை. புள்ளி வைத்துதான் கோலம் போட வேண்டும், கோலம் போட்டுவிட்டு புள்ளி வைக்கக் கூடாது, அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக அதற்கான காரணத்தை கொள்கைகளை கூறியிருக்க வேண்டும், மக்கள் ஏமாந்தால் முதலமைச்சராக வருவேன், எம்எல்ஏவாக ஆசை என தெளிவாக கூறியிருக்கலாம். ஒத்த கருத்துடன் இருக்கிறார் என்றால் விஜய் ஏன் தனி கட்சியாக ஆரம்பித்து தனி ராஜ்ஜியம் நடத்த வேண்டும் காங்கிரஸில் சேர்ந்திருக்கலாமே! நீட் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பேசும் விஜய் திமுக அல்லது காங்கிரசில் இணைந்திருக்கலாம்.
ஆளுநருக்கு ஜெனரல் நாலேஜ் இருக்கா..? .ஒரு வரலாறும் தெரியாது. ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசி கொண்டிருக்கிறார். ராஜ் பவனில் பல அறைகள் இருக்கின்றன. தினம் ஒரு அறைக்குள் சென்று வருகிறார். எதற்கு என்று கேட்க கூடாது” என்றார்.