‘கண் மஞ்சளா இருக்கு, டாக்டர் கிட்ட போகலாம்’ - பச்சிளம் குழந்தையை நேக்காக கடத்திய பெண்.. 15 மணி நேரத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்..
சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை 15 மணி நேரத்தில் போலீஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கதுரை - வெண்ணிலா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரவத்திற்காக கடந்த 5ம் தேதி சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய தினமே வெண்ணிலாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவர் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு வெண்ணிலாவிற்கு உதவியாக மருத்துவமனையில் அவரது தாய் இந்திரா இருந்துள்ளார். அப்போது அதே வார்டில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வெண்ணிலா மற்றும் அவரது தாய் இந்திராவுடன் பழக்கமாகியுள்ளார். தனது உறவினர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு உதவியாக இருக்க மருத்துவமனைக்கு வந்திருப்பதாகவும் அந்தப்பெண் கூறியதை நம்பி இவர்களும் பழகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை குழந்தையின் கண் மஞ்சளாக இருப்பதாகவும், கண் மருத்துவரிடம் காண்பித்தால் அவர்கள் அதனை சரிசெய்துவிடுவார்கல் என்றும் இந்திராவிடம் கூறியிருக்கிறார். இதனை நம்பிய வெண்ணிலாவின் தாய் குழந்தையை தூக்கிக்கொண்டு புதிதாக அறிமுகமான பெண்ணுடன் கண் மருத்துவ பிரிவிற்கு சென்றிருக்கிறார். அங்கு கண் மருத்துவ பிரிவில் டாக்டர்களிடம் காண்பித்து விட்டு, குழந்தையை பெண் வாங்கி வைத்துள்ளார். பின்னர் இந்திராவிடம் மருந்து சீட்டை கொடுத்து நீங்கள் மாத்திரை வாங்கி வாருங்கள் நான் இங்கேயே இருக்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறார். அதன்படியே மாத்திரை வாங்கிவிட்டு இந்திரா திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தையுடன் இருந்த அப்பெண்ணை காணவில்லை.
குழந்தையை அந்தப்பெண் கடத்திச் சென்றுவிட்டதை அறிந்த இந்திரா மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். நிர்வாகத்தினம் அளித்த புகாரின் பேரில், ஜி.ஹெச் புறக்காவல் நிலைய போலீசார் உடனடியாக மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நீல நிற புடவை அணிந்த பெண் ஒருவர் மாஸ்க் அணிந்துகொண்டு குழந்தையை கடத்திச் செல்வது தெரிந்தது. இதன் அடிப்படையில் விசாரணைடை தொடங்கிய போலீசார், வாழப்பாடியில் கிடைத்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி குழந்தையை பயன்படுத்திய பெண்ணை நெருங்கினர். தீவிர விசாரணைக்கு பின்னர் காரிப்பட்டியைச் சேர்ந்த பெண் வினோதினி என்கிற பெண்ணை கைது செய்து, அவரிடம் இருந்த ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்தப்பெண்ணிடம் திவீர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கடத்தப்பட்ட 15 மணி நேரத்திற்குள் குழந்தையை பத்திரமாக மீட்டுக்கொடுத்த சேலம் மாநகர போலீஸாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.