×

“கணவன் உயிருக்கு ஆபத்து... தாலி தோஷம்..” பூஜை செய்து 10 சவரன் நகைகளுடன் தப்பியோடிய போலி சாமியார்

 

“உனது கணவனது உயிருக்கு ஆபத்து...உன் தாலி கழுத்தில் நிலைக்கவேண்டுமானால் பூஜை நடத்தி செய்வினையை அகற்றவேண்டும்” எனக் கூறி சாதாரண கட்டிட தொழிலாளி வீட்டில் 10 சவரன் ஆட்டைபோட்ட போலி சாமியாரின் செயல் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள முல்லைவாசல் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபு. கட்டிடத் தொழிலாளியான இவரது வீட்டுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் ஆட்டோவில் வந்த 85 வயது மதிக்கத்தக்க முதியவர், தான் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் எனவும், தனக்கு இரண்டு வீடுகள் கட்டிதரவேண்டும் எனக் கூறி தன்னை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் அக்குடும்பத்தில் உள்ளவர்களிடம் சகஜமா பேசி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்  அந்த முதியவர். பின்னர் அக்குடும்ப தலைவி லெட்சுமியிடமும் , பிரபு மனைவி ராஜலெட்சுமியிடமும்  தான் ஒரு சாமியார் எனவும் ராஜலெட்சுமி கணவர் பிரபுவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், உனது குடும்பத்திற்கு வேண்டாதவர்கள் செய்வினை செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார். “உனது கழுத்தில் தாலி நிலைக்க வேண்டுமென்றால் உடனடியாக பூஜைக்கு ஏற்பாடு செய்தால் நான் செய்வினையை எடுத்து உன் கணவரது உயிரை காப்பாற்றி உன் தாலி பாக்கியத்தை நிலைத்திட செய்கிறேன்” என போலி சாமியார் கூறியுள்ளார். மேலும் போலி சாமியார் நகைகளை ஆட்டை போடும் வகையில் கட்டிடத் தொழிலாளி மனைவியிடம் உன் வீட்டில் உள்ள நகைகள் பெட்டியிலோ, பீரோவிலோ இருந்தால் செய்வினை அகற்ற முடியாது எனவே  “நகைகளை ஒரு துணியில் சுருட்டி எடுத்துவா” என சாமியார் தனக்கே உரித்தான பாணியில் எச்சரித்துள்ளார்.   

செய்வினை அகற்றும் பூஜை தொடங்கி நேரம் ஆக ஆக போலி சாமியார் நகைகளை ஆட்டை போடும் பணியினை நுணுக்கமாக கையால தொடங்கினார்.  அப்போது கட்டிடத் தொழிலாளி குடும்பத்தினரை ஒவ்வொருவராக அழைத்து கிழக்கே போ, மேற்கே போ என ஒவ்வொரு திசைவாரியாக பிரித்து வெளியே அனுப்பிவிட்டு துணியில் சுருட்டி வைக்கப்பட்ட தங்க நகைகளை வாரி சுருட்டிக்கொண்டு, ஏற்கனவே கையில் வைத்திருந்த சிறிய கருங்கல் ஜல்லிகளை துணியில் சுருட்டி சந்தேகம் ஏற்படாத வகையில் கட்டிடத் தொழிலாளி மனைவியிடம் கொடுத்து பெட்டியில் வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வா என கூறியுள்ளார். இதனை அடுத்து போலி சாமியார் பேச்சை நம்பி கட்டிடத்தொழிலாளி மனைவி மற்றும் குடும்பத்தினர் சாமியார் முன்பு வந்து பவ்வியமாக கைகட்டி நிற்க அவர்களிடம் பூஜை நல்லவிதமாக முடிந்துவிட்டது கவலைப்பட தேவையில்லை, உனது கணவரது உயிருக்கு ஆபத்தாக இருந்த செய்வினையை எடுத்துவிட்டேன் என கூறி கட்டிடத் தொழிலாளியின் குடும்பத்தினர் அனைவருக்கும் போலி சாமியார் விபூதி அடித்து ஆசி வழங்கியுள்ளார். பின்னர் போலி சாமியார் உங்களுக்கு வேலை முடிந்ததும் என்னை அப்படியே விட்டுவிடாதீர்கள் எனக்கு பல பூஜைகள் உள்ளது, அருகில் உள்ள நீடாமங்கலம் பேருந்து நிலையத்தில் விட்டுவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.   

இதனை அடுத்து சாமியாரை அக்குடும்பத்தினர் பத்திரமாக நீடாமங்கலம் பேருந்து நிலையத்திற்கு இருசக்கர வாகனம் மூலம் அழைத்து சென்று வழியனுப்பிவைத்துள்ளனர். வந்தது போலி சாமியார் என அறியாமல் கட்டிடத் தொழிலாளியின் மனைவியோ நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு  தனது கணவரிடம் உங்கள் உயிருக்கு இருந்த ஆபத்தை சாமியார் போக்கிவிட்டார், நீங்கள் கஷ்டப்பட்டு பணத்தை சேமித்து நீங்கள் வாங்கிகொடுத்த நகைகள், குடும்பத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை என சந்தோஷத்துடன் பேசிகொண்டிருந்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் சாமியார் பூஜைக்காக பயன்படுத்திய பொருட்களை எல்லாம் இருந்த இடத்தில் வைத்துவிட்டு, பெட்டியில் இருந்து துணியை பிரித்து நகைகளை எடுக்க முற்பட்டபோது அதில் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அப்போது தான் கட்டிடத்தொழிலாளி மனைவிக்கு சாமியார் செய்வினை கோளாறை போக்க வரவில்லை, நமது தங்க நகைகளை நூதன முறையில் கொள்ளயைடிக்க வந்த போலி சாமியார் என புரிந்தது. இதனையடுத்து அருகில் உள்ள நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பிரபு குடும்பத்தினர்.