பிரபல தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்..
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான டில்லி பாபு உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரியின் நிறுவனர் தான் பிரபல தயாரிப்பாளார் ஜி.டில்லி பாபு. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (செப்.9) அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் முதன் முதலில் கடந்த 2015ம் ஆண்டு ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
இதனைத்தொடர்ந்து, ‘மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’ மற்றும் ‘கள்வன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இதில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று , ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்ற படங்கள் ஆகும்.
மேலும், தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பதற்கு பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு முன்தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தார். இதனிடையே தனது மகனை நாயகனாக்க வேண்டும் என்பதும் இவருடைய கனவாக இருந்துள்ளது. அதன்படியே ‘வளையம்’ என்ற பெயரில் தனது மகன் தேவ் நடிக்க ஒரு படத்தினை தயாரித்து வந்துள்ளார். இந்த நிலையில் தயாரிப்பாளர் டில்லிபாபு காலமானது, திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10.30 மணியளவில் உடல் கொண்டுவரப்பட்டு, மாலை 4.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. திரைத்துறையை சேர்ந்த பலரும் தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.