×

பிரபல ரவுடி சிடி மணி கைது- என்கவுண்டர் செய்து விடுவார்களோ என அச்சம்
 

 

சென்னையை கலக்கி வந்த பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான சிடி மணியை சேலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக சி.டி மணி மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல  ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பரான சி.டி மணி, வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின்னர் தலைமறைவாக இருந்து வரும் ரவுடிகளை கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டதின் பேரில் தொடர்ச்சியாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் சி.டி மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி அவரது தந்தை பார்த்தசாரதி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலத்தில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் சிடி மணி குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் நிலையில் அத்துமீறி வீட்டில் நுழைந்து  போலீசார் சிடி மணியை கைது செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

பல ரவுடிகள் என்கவுண்டர்கள் செய்யப்பட்டு வருவதால், தனது மகன் தற்போது எங்கே உள்ளார் என்ற விவரங்கள் தெரியாத நிலையில், தனது மகன் சிடி மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.