அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் பாதிப்பு- சசிகலா
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்து அறுவடை முடிந்துள்ள நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் சரிவர திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழக விவசாயப்பெருங்குடி மக்களை காக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக சசிகலா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாக, விவசாயிகள் சொல்லி வேதனைப்படுகின்றனர். இவ்வாண்டு பருவமழை சரிவர பெய்யாததாலும், திமுக தலைமையிலான அரசு கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தேவையான உரிய காவிரி நீரை பெற்று தராததாலும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணத்தாலும் நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். அதாவது கடந்த ஆண்டு 2022-23 பருவத்தில் சம்பா சாகுபடி 1 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேர் நடவு செய்யப்பட்டு, 5 லட்சத்து 19 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 2023-24 ல் 1 லட்சத்து 35 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்து, ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே நடவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தற்போது வரை 370 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டு, இதுவரை 19,222 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது. திமுகவினரின் நிர்வாக சீர்கேடுகளால் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், நடப்பு பருவத்தில் இதுவரை 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சொல்லி வேதனைப்படுகிறார்கள். இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் சரிவர திறக்கப்படாததால் தனியார் நெல் வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு விற்க வேண்டியுள்ளது என்றும், இதன் காரணமாக கடுமையாக நஷ்டம் அடைவதாக சொல்லி மிகவும் வேதனைப் படுகின்றனர். அதாவது அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன நெல் 40 கிலோ மூட்டை கொண்ட சிப்பம், ஊக்கத் தொகையுடன், ஒரு கிலோ 23 ரூபாய் பத்து காசு என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட வேண்டியதை, தனியார் நெல் வியாபாரிகளிடம் ஒரு கிலோ 20 ரூபாய் என்று குறைவான கொள்முதல் விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாகவும், இதனால் மிகவும் நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். அதிலும் தனியார் நெல் வியாபாரிகள் நெல்லுக்கான பணத்தை சுமார் ஒரு மாதம் கழித்து தவணை முறையில் தருவதால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்படுகிறார்கள். இதுபோன்று திமுகவினரின் செயல்பாடுகளை உன்னிப்பாக பார்த்தால், எல்லாவற்றிலும் தனியார் வியாபாரிகளை, தனியார் நிறுவனங்களை மறைமுகமாக ஊக்குவிப்பதாகத்தான் தெரிகிறது. இது வாக்களித்து மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
அதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்பொழுது சம்பா 80 ஆயிரம் ஏக்கரிலும் தாளடி 40 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி நடைப்பெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 176 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கும் நிலையில், 47 இடங்களில் மட்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகின்றன. இந்த ஆண்டு ஏற்கனவே பருவம் தப்பிய மழையினால் மூன்று முறை நெல் சாகுபடி செய்து அழிந்த நிலையில், தற்பொழுது நான்காவது முறையாக சாகுபடி செய்து அறுவடை பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைமையிலான அரசு தங்கள் பங்குக்கு நெல் கொள்முதலை இன்னும் ஆரம்பிக்காமல் காலதாமதம் செய்வது மிகவும் வேதனையளிக்கிறது. மேலும் தமிழக அரசிடம் போதுமான எண்ணிக்கையில் அறுவடை இயந்திரம் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் தனியாரிடம் உள்ள அறுவடை இயந்திரங்களை சுமார் ரூ.2,600 முதல் ரூ.3,000 வரை கூடுதல் கட்டணம் கொடுத்து அறுவடை செய்யும் சூழ்நிலை இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பருவத்திற்காக ஜனவரி முதல் வாரம் மற்றும் ஜனவரி 15 தேதிக்கு பிறகு என இரண்டு பிரிவுகளாக மொத்தம் 525 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில், தற்போது இம்மாவட்டத்தில் இதுவரை 375 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 பருவ சாகுபடிகளில் இம்மாவட்டத்தில் மொத்தமாக 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். அதில் சம்பா, தாளடி பருவத்தில் மட்டும் 4 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நெல் உற்பத்தி கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளதாகவும் சொல்லி விவசாயிகள் மிகவும் வேதனைப்படுகின்றனர்.
விவசாயிகள் ஏற்கனவே தொடர் மழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி 40% மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இடுபொருட்கள் விலை உயர்வு, உரவிலை உயர்வு, விவசாய தொழிலாளர்கள் சம்பள உயர்வு, அறுவடை இயந்திரத்தின் வாடகை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் நெல்லுக்கான உற்பத்தி செலவு மிகவும் அதிகரித்து இருக்கும் நிலையில், ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று’ திமுக தலைமையிலான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை.
மேலும், சிறு விவசாயிகளிடம் போதிய அளவு தார்பாய்,சாக்குபைகள்,படுதா இல்லாத காரணத்தால் அறுவடை செய்யும் பணியையும் ஆரம்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் அறுவடை செய்த நெல்லை, திமுக தலைமையிலான அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் சரிவர திறக்கப்படாமல் இருப்பதால், ஒரு சில விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை சரி செய்வதற்காக, தனியார் நெல் வியாபாரிகளிடம் நெல்லை கடனுக்கு விற்கவேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் சூழலில், விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அடுக்கிவைத்து கொண்டு நெல்மூட்டைகளை இரவு,பகலாக பாதுகாத்து வருகின்றனர். அதேபோன்று, ஒரு சில சிறு விவசாயிகள் வேறு வழியின்றி அறுவடை செய்த நெல்லை தங்கள் வீடுகளிலேயே கொட்டிவைத்து கொண்டு திமுக தலைமையிலான அரசு எப்பொழுது கொள்முதல் நிலையங்களை திறந்து தங்கள் நெல்லை எடுப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக்கின்றனர்.
மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை, 22 சதவீதம் அளவுக்கு உயர்த்தி தர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையினை திமுக தலைமையிலான அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்று தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையில் நெல் ஒரு குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் ஆதாரவிலை வழங்கப்படும் என மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதை இன்றுவரை நிறைவேற்ற வில்லை
திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிவுறும் நிலையில், கடந்த ஆண்டுகளில் அரசு கொள்முதல் நிலையங்களிலேயே ஒரு மூட்டைக்கு 40 முதல் 50 ரூபாய் வரை லஞ்சமாக தரவேண்டி இருந்ததாகவும், இது போன்ற தவறுகள் இந்த ஆண்டும் நடைபெறாமல் தடுக்க திமுக தலைமையிலான அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். விவசாயிகள் இது போன்று அநியாயமாக வஞ்சிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதை விட்டுவிட்டு திமுக தலைமையிலான அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். அதாவது, திமுக தலைமையிலான அரசு விவசாயத்திற்கு என்று தனியாக நிதி நிலை அறிக்கை அளித்தும், தமிழக விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.
எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் விவசாயத்தை அழிக்கின்ற வகையில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் விவசாயத்தை காத்திடவும், விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை காலதாமதமின்றி செய்திட தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.