×

விவசாயிகள் அதிர்ச்சி..! மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பு குறைவு தான்..!   

 

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நூலாக்கம் செய்துள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டை வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது., “தமிழகத்தில் மொத்தம் 30 சதவீதம் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. கொப்பரைத் தேங்காய்க்கான விலையை மத்திய அரசு சற்று அதிகரித்து உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உடனடியாக தென்னை மரங்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் 91 ஆயிரம் ஹெக்டேர் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை சாகுபடி பாதிப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.31 ஆயிரம் என்று இதுவரை ரூ.14 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் வருமளவுக்கு தமிழகத்தில் மழை பெய்யவில்லை. பயிர்களை பாதிக்கும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இருந்தாலும் பயிர் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.  டெல்டா பகுதி குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்கும் வாய்ப்பு குறைவு. தண்ணீர் வரத்து மற்றும் இருப்பை பொறுத்து மேட்டூர் அணை திறக்கப்படும். இருப்பினும் நடவு மேற்கொள்ளும் வகையில் விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்.” என்று அவர் தெரிவித்தார்.