×

3-வதும் பெண் குழந்தை... பிறந்து 9 நாட்களான சிசிவை கத்திரிக்கோலால் கொன்ற தந்தை

 

சென்னையில் மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் பிறந்து ஒன்பது நாட்களேயான நிலையில் கத்திரிக்கோலால் குழந்தையை குத்தி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் (38). இவரது மனைவி விஜயலட்சுமி  கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள்  உள்ளன. இந்நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக விஜயலட்சுமி கடந்த 29ஆம் தேதி ராயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த நான்காம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி குழந்தையை ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி  விஜயலட்சுமி இருவரும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். வயிற்றில் பலத்த காயத்துடன் குழந்தை அங்கு அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் இருந்த காயங்களை பார்த்து சந்தேகம் அடைந்து கடந்த எட்டாம் தேதி இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வடக்கு மண்டல மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நேரில் சென்று குழந்தையின் காயத்தை பார்த்தனர். மூன்று இடத்தில் குழந்தைக்கு வயிற்றில் தையல்கள் போடப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்போது குழந்தை சிகிச்சை பெற்று வந்துள்ளது. 

இதனை அடுத்து இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த பத்தாம் தேதி குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவர்கள் மற்றும் போலீசாருக்கு குழந்தை இறப்பில் சந்தேகம் இருந்ததால் குழந்தையின் உடலை  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மாதிரிகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் கூர்மையான ஆயுதம் வைத்து குழந்தையை வயிற்றில் குத்தியதற்கான அடையாளங்கள் உள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. 

இதனையடுத்து வியாசர்பாடி  போலீசார் விசாரணை நடத்தியதில்  குழந்தையின் தந்தை ராஜ்குமார் குழந்தையை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் அவர் இதனை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராஜ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.