×

தூங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை

 

இரண்டு பெண் குழந்தைகளை  கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மாநகர் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி(35). இவர் கூலி வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு ரக்ஷிதா, ரக்‌ஷனா இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. கணவன், மனைவி இடையே கடந்த சில மாதங்களாக  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி சில நாட்களாக கணவரிடம் சண்டை போட்டு விட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். 

கணவர் சேதுபதி கம்ப்யூட்டர் கிளாஸில் சேர்த்துவிட்ட நிலையில் ராஜேஸ்வரி கணிணி வகுப்பு படித்துவந்துள்ளார். இன்று காலை வீட்டில் இரு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்த போது இரண்டு குழந்தைகளையும்  கத்தியால் குத்தியும் கம்பியால் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார்.  பின்னர் தந்தை சேதுபதியும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனிடையே கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி கதவை திறந்து பார்த்த போது குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில், கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் இரு குழந்தைகளின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற சேதுபதியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக சேதுபதியின் மனைவி ராஜேஸ்வரியிடம்  அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.