×

நடுக்கடலில் மீனவர்கள் மோதல்! நாகையில் பரபரப்பு

 

கோடியக்கரை தென் கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. 

நாகப்பட்டினம்  மாவட்டம் செருதூர் மீனவ கிராம மீன் இறங்குதளத்தில் இருந்து நேற்று  30 க்கும் மேற்பட்ட பைபர்  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் இதில் 8 பைபர் படகில் சென்ற மீனவர்கள் தோப்புத்துறையில் இருந்து கிழக்கே 23 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து விட்டு நங்கூரம் மூலம் படகை நடுக்கடலில் நிறுத்தி ஓய்வெடுத்துள்ளனர். அப்பொழுது அவ்வழியே  இரு விசைப்படகில் வந்த மீனவர்கள் வலையை அறுத்துவிட்டு சென்றதால் அது குறித்து கேட்ட தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு  மூன்று பைபர் படகுகளை அவர்களது விசைப்படையில் கட்டி இழுத்துச் சென்றதாகவும், பின்னர் இரும்பு உருண்டை, ஐஸ் கட்டி போன்றவற்றால் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் காயமடைந்த செந்தில், வில்பிரட், சத்தியமூர்த்தி ஆகிய மூவரை தங்க மீனவர்கள் மூன்று பைபர் படக்கில் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து பைபர் படகில் உள்ள மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.

கரை திரும்பிய பைபர் படகு மீனவர்கள் தங்கள் மீது அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.