பெசன்ட் நகர் மாதா ஆலயத்தில் கொடியேற்றம் கோலாகலம்
சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 52-வது ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.
சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் தொடக்க நிகழ்ச்சியாக திருக்கொடியேற்றும் விழா இன்று மாலை நடந்தது. விழாவுக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கி, கொடி ஏற்றி வைத்தார். விழாவில், அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் பங்கு தந்தை இ.அருளப்பா, சாந்தோம் ஆலயத்தின் அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை,ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.இன்று தொடங்கிய ஆண்டு திருவிழா, வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. இடைப்பட்ட நாட்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை நலம் பெறும் விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமை தாங்குகிறார். நாளை மறுதினம் பக்த சபை விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய நாளில் மாலை 5.30 மணிக்கு தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கி திருப்பலியை நடத்துகிறார். வருகிற 1-ந்தேதி நற்கருணை பெருவிழா நடக்கிறது.
இதனை முன்னிட்டு மாலை 5.30 மணிக்கு ஆலயத்தில் நடக்கும் திருப்பலியில் ஆவடி மறைவட்ட முதன்மை குரு பி.ஜெ.லாரன்ஸ் ராஜ் தலைமை தாங்குகிறார்.2-ந்தேதி தேவ அழைத்தல் விழாவையொட்டி மாலை 5.30 மணிக்கு சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு ஜி.ஜே.அந்தோணிசாமி தலைமை தாங்கி திருப்பலியை நடத்த உள்ளார்.3-ந்தேதி உழைப்பாளர் விழாவும், 4-ந்தேதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழாவும், 5-ந்தேதி ஆசிரியர்கள் விழாவும், 6-ந்தேதி குடும்ப விழாவும் நடக்கிறது. இதனையொட்டி இந்த நாட்களில் மாலை 5.30 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. 7-ந்தேதி தேர்த் திருவிழா, சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை நடக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து 8 தேதி அன்னையின் பிறப்பு பெருவிழாவும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியை ஒட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெசன்ட் நகருக்கு வருகை தந்தனர்.