×


வெள்ள நிவாரணம் - தமிழ்நாடு அரசு வழக்கு!!

 

கடந்த ஆண்டு சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கன மழை பெய்தது. இதன் காரணமாக நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்டன.  மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  இந்த சூழலில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்து மக்களை நிலைகுலைய வைத்தது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது.  இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில்,  சுமார் 30,000 கோடிக்கு மேல் நிவாரணம் கேட்டிருந்தார் ஆனால் தமிழ்நாடு அரசு கோரிய நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை.

இந்நிலையில் வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.  வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என்று முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார. வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடரப்படும் என முதல்வர் நேற்று வேலூர் பிரசார கூட்டத்தில் தெரிவித்து இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.