×

மருமகளுடன் கள்ளக்காதல்- முதியவரை கொன்று எரித்த காவலாளி

 

வேடசந்தூர் அருகே மருமகளுடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்த முதியவரை கொன்று உடலை தீ வைத்து எரித்த காவலாளி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள  சேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 72). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.  2 மகன்கள் மற்றும் மகள் திருமணமாகி கோயமுத்தூரில் வசித்து வருகின்றனர். ரெங்கசாமி சேர்வைக்காரன்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் ரெங்கசாமியை காணவில்லை என அவரது மகன் யுவராஜா(40) கடந்த 17-ந்தேதி குஜிலியம்பாறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குஜிலியம்பாறை போலீசார் ரெங்கசாமியை தீவிரமாக தேடி வந்தனர்.


இந்த நிலையில் குஜிலியம்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வந்த பண்ணக்காரன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(64) என்பவருடன் ரெங்கசாமி வெட்டு சீட்டு விளையாடி வந்தது தெரிந்தது. அதை தொடர்ந்து போலீசார் கோவிந்தராஜை பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  கோவிந்தராஜ் பண்ணக்காரன்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் மகன் வடிவேல்குமார் மற்றும் மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். அப்போது கோவிந்தராஜுக்கும் அவரது மருமகள் ஈஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே  கோவிந்தராஜின் வீட்டிற்கு சீட்டு விளையாட வந்த ரங்கசாமிக்கும் ஈஸ்வரிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.


கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஈஸ்வரி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேவைக்காரன்பட்டியில் உள்ள ரெங்கசாமியின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்போது மருமகள் ஈஸ்வரிக்கும், ரெங்கசாமிக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதை அறிந்த கோவிந்தராஜ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதையடுத்து ரெங்கசாமியை கொலை செய்ய கோவிந்தராஜ் திட்டம் தீட்டினார். கடந்த 2-ம் தேதி ரெங்கசாமியை தனது வீட்டிற்கு வரவழைத்த கோவிந்தராஜ் மருமகளுடான கள்ளக்காதல் குறித்து பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ரெங்கசாமியை,  கோவிந்தராஜ் பலமாக தாக்கி வீட்டில் இருந்த சிமெண்ட் தூணில் ரெங்கசாமியின் தலையை மோத வைத்தார். இதில் சம்பவ இடத்திலேயே ரெங்கசாமி பலியானார்.  பின்னர் இரவு அவரின் உடலை சாக்குப் பையில் கட்டி அருகில் உள்ள வரட்டாற்று ஓடைக்கு எடுத்துச் சென்று தீ வைத்து கோவிந்தராஜ் எரித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குஜிலியம்பாறை போலீசார் கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.