×

ஒரே நாடு, ஒரே தேர்தல் காரணமாக தி.மு.க.வுக்கு பயம் - ஜெயக்குமார் விமர்சனம்

 

ஒரே நாடு, ஒரே தேர்தல் காரணமாக தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு உணர்த்துகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம், இதுதான் அண்ணா கண்ட திமுக.  யாரின் காலிலும் விழுந்து பதவியை பெற வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டை காப்பாற்றினோம். இதேபோன்று  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவை காப்பாற்ற வேண்டும். ’இந்தியா’ என்றாலே பாஜகவுக்கு அச்சம் வந்துவிடுகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.  ஆளுங்கட்சியாக இருந்தபோது, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக இப்போது ஆதரவளிக்கிறது.  ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் அதிமுக தான் பலிகடா ஆகப்போகிறது. இவ்வாறு கூறினார். 

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள் அதேபோல தான் மு.க.ஸ்டாலினின் பேச்சு உள்ளது.  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயமாகும் எனவும்,  சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவினங்கள் குறையும் எனவும் கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக தி.மு.க. மிரண்டு போய் இருப்பதையே மு.க.ஸ்டாலினின் பேச்சு உணர்த்துகிறது என்றும் கூறினார்.