×

"ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை" - ஐகோர்ட்

 

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி தமிழக பா.ஜ. செய்தித்தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார் பந்தயம் நடத்தும் போது மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்.ஐ.ஏ. எனும் சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு ஒப்புதல் பெறப்பட்டதா? ஓமந்தூரார் மருத்துவமனைக்கு இடையூறு இல்லாமல் மக்கள் செல்ல எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பொதுமக்கள் பாதுகாப்பு, இயல்பான போக்குவரத்து ஏற்பாடு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் செல்வது உள்ளிட்டவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, எப்.ஐ.ஏ. சான்று குறித்து மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பிய போது, சான்று இல்லாமல் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர்  பி.எஸ்.ராமன் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என குறிப்பிட்டனர்.

அப்போது  பந்தயம் நடத்தும் நிறுவனம் சார்பில் ,பந்தயம் நடக்கும் தினத்தன்று காலையில் தான் எப்.ஐ.ஏ. ஆய்வு செய்யும் என விளக்கமளித்தார். இதையடுத்து, எப்.ஐ.ஏ. சான்று நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டிருந்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என்றும், FIA அனுமதியளிக்கும் பட்சத்தில் பந்தயம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளனர். மருத்துவமனை மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட யாருக்கும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.