சமூகச் சீரழிவுக்கு காரணமான மது அரக்கனுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது?
வீட்டிற்கு அருகில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளக்கிணறு என்ற கிராமத்தில், செந்தில்குமார் என்பவரின் வீட்டிற்கு அருகில் அவருக்கு சொந்தமான நிலத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் செந்தில்குமாரையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த நால்வருக்கும் எனது மரியாதையை செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒருவர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மது மிகவும் கொடூரமானது; சமூகச் சீரழிவுகளுக்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் மது தான் காரணம் என்பதற்கு இதைவிட கொடிய எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை. தங்களின் வீட்டுக்கு அருகில் மது குடிக்கக் கூடாது என்று கூறியதற்காக நான்கு அப்பாவிகளை துடிக்கத் துடிக்க வெட்டி படுகொலை செய்யும் துணிச்சல் குடிகார கும்பலுக்கு வந்திருக்கிறது என்றால், மது மனிதனை மிருகமாக்குகிறது என்று தானே பொருள்? எல்லா குற்றங்களுக்கும் தாய் மது தான் என்பதை நன்றாக அறிந்த பிறகும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு மது அரக்கனின் அட்டகாசத்தை அனுமதிக்கப் போகிறோம்?
மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதற்கு இந்தப் படுகொலைகள் மட்டுமே சான்று அல்ல. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் பிறந்தநாளையொட்டி, கடந்த ஒன்றாம் தேதி அவரது சக மாணவிகள் 7 பேர் வகுப்பறையிலேயே மது அருந்தி, நடனமாடியுள்ளனர். இதையறிந்த பள்ளி நிர்வாகம் அவர்களை இடை நீக்கம் செய்திருக்கிறது. அதனால் அவமானமடைந்த மாணவிகளில் ஒருவர் நஞ்சு குடித்து தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் முல்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், தமது தந்தை குடித்து விட்டு வந்து தாயை தாக்குவதாகவும், அதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் செய்திருக்கிறான். மதுவால் சமூகத்தில் ஏற்பட்ட சீரழிவுகளின் பட்டியல் தொடர்கிறது.