×

கோயம்பேடு மார்க்கெட்டில் உச்சம் தொட்ட பூண்டு விலை.. 

 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பூண்டு முக்கியத்துவன் வாய்ந்தது. மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியதால் பொதுவாகவே பூண்டுக்கு தனி மவுசுதான். பூண்டு உற்பத்தியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பூண்டு சந்தை அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்படும் பூண்டுகள் , இங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு பின்னர்  மாநிலம் முழுவதும் மொத்தம், சில்லறை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.  

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ பூண்டு ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர், விலை குறையத் தொடங்கி கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து  கடந்த மாதம் ஒரு கிலோ பூண்டின் விலை 280 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  இந்த மாதம் தொடக்கத்திலேயே பூண்டின் விலை  உச்சத்தை எட்டியுள்ளது .  கோயம்பேடு சந்தையில் ஆகஸ்ட் மாத இறுதியில் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ பூண்டு, தற்போது ரூ.60 அதிகரித்து ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ரூ.380-வரை விற்கப்படுகிறது.  மேலும், தொடர்ந்து பூண்டு விலை  உயர வாய்ப்புள்ளதாகவும் கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.