ரூ.10 கூல்ட்ரிங்ஸ் குடித்து சிறுமி பலி : குளிர்பான ஆலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு..
ரூ.10 குளிர்பானம் குடித்து திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமி உயிரிழந்ததை அடுத்து, நாமக்கல்லில் உள்ள குளிர்பான ஆலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - ஜோதிலெட்சுமி தம்பதி. இவர்களுடைய 6 வயது மகள் காவியா நேற்று ( ஆக.12) மதியம் அருகில் உள்ள கடையில் 10 ரூபாய்க்கு Dailee நிறுவனத்தின் கூல்ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். இந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்திலேயே காவியா வாயில் நுரைத்தள்ளி மயங்கியுள்ளார். உடனே குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி காவியா உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது குழந்தை மரணத்திற்கு Dailee குளிர்பானமே காரணம் என காவியாவின் தந்தை வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் ₹10 பாட்டில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே Dailee குளிர்பான ஆலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. திருவண்ணாமலை சிறுமி குடித்த Dailee குளிர்பான ஆலையின் கிளை ராசிபுரத்தில் செயல்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.