×

ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது - ஜி.கே.வாசன் அறிக்கை

 

தமிழகத்தில் தஞ்சை மாவட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதாவது பள்ளிக்கு வரும் நபர் யார், எங்கிருந்து வருகிறார், என்ன காரணத்திற்காக
வருகிறார் ஆகியவற்றை கேட்டறிந்து அது சம்பந்தமாக பள்ளித் தலைமையிடமும், சம்பந்தப்பட்டவரிடமும் அனுமதி பெற்றுத் தான் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும். எக்காரணத்திற்காகவும் தெரியாதவர்களை, காரணம் இல்லாமல் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கவே கூடாது. அரசுப்பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே ஒரு ஆசிரியை கொலை செய்யப்பட்டது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அரசுப்பள்ளிகளை கண்காணிப்பதும், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியப் பணியாகும். இது போன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க, குற்றச்செயல்கள் தொடராமல் இருக்க காவல்துறையின் நடவடிக்கையும், குற்றத்திற்கான தண்டனையும் காலம் தாழ்த்தாமல் தேவை. தமிழக அரசு கல்விப்பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்க, தேவைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க ஆலோசனை செய்யலாம். மேலும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு #தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தமிழக அரசு, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.