×

ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்த தங்கம் விலை.. 

 


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை  சவரனுக்கு 80 ரூபாய்  உயர்ந்துள்ளது.  

தங்கம் விலை எப்போது ஏற்ற இறக்கத்துடனேயே இருப்பதுபோல் இருந்தாலும்,  கடந்த 5 ஆண்டுகளில் கனிசமான விலையேற்றம் கண்டிருக்கிறது. இந்த ஆண்டு மே மாதம் அதிகபட்சமாக ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் அவ்வப்போது சற்று குறைவது, விலை உயர்வதுமாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 23ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட 2024 -25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அதிரடியாக தங்கம் விலை சரிந்தது.  

தொடர்ந்து விலை சரியும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் சற்று மகிழ்ச்சியுடன் இருந்த நடுத்தர வர்கத்தினருக்கு அந்த சந்தோஷம் 5 நாட்கள் வரை மட்டுமே நீடித்தது. ஆம், அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.  கடந்த 5ம் தேதி  தங்கம் விலை  சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் , ஆக.6 மற்றும் ஆக.7ம் தேதிகளில்  தேதி சவரனுக்கு ரூ.560 என அதிரடியாக குறைந்தது.  

 அதன்பின்னர் ஆக.8ம் தேதி சவரனுக்கு  ரூ.120ம், 9ம் தேதி சவரனுக்கு ரூ. 600 ,  10ம் தேதி( சனிக்கிழமை) சவரனுக்கு ரூ. 160,  ஆகஸ்ட் 12 சவரனுக்கு ரூ.200 என தங்கம் விலை கனிசமாக ஏற்றம் கண்டு வந்தது.  இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 13ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்துஒரு சவரன் மீண்டும் ரூ. 52,000 ஐ தாண்டியிருக்கிறது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.52,520க்கும் ,  கிராம் ரூ.6,565க்கும் விற்கப்பட்டது.  பின்னர் ஆக.14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்திருந்தது. 
 
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு  மேலும்  80 ரூபாய் அதிகரித்திருக்கிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன்  ரூ.52,520க்கும் , கிராமுக்கு  10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,565க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் சில்லறெஐ விற்பனையில்  வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து , ஒரு கிராம் ரூ.88.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.