×

தொடர்ந்து 4வது நாளாக குறைந்த தங்கம் விலை.. 

 

பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.  

2024 - 2025ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்  கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.  அதில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15%ல் இருந்து 6% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.  இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிரடியாக குறைந்து வருகிறது.  

கடந்த 23ம் தேதி  ( பட்ஜெட் நாள்)  காலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் ஒரு கிராம்  ரூ.6,810க்கு விற்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட பின்னர், நண்பகலுக்குப் பிறகு அதிரடியாக   தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 , கிராமுக்கு ரூ.260ம் குறைந்தது. அன்றைய தினம்  ஒரு கிராம் தங்கம் ரூ.6,550க்கும், ஒரு சவரன் ரூ.52,400க்கும் விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் அதிரடியாக ரூ.3.10 குறைந்தது. அதன்படி  ஒரு கிராம் ரூ.92.50க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்று முன் தினம் சவரனுக்கு ₹480 குறைந்து ஒரு சவரன் ₹51,920-க்கும்,  கிராமுக்கு  60 ரூபாய் குறைந்து   ஒரு கிராம் ₹6,490-க்கு விற்பனையானது.  இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து,  ஒரு கிராம் ரூ.92க்கு விற்கப்பட்டது.  தொடர்ந்து 3வது நாளான நேற்று (ஜூலை 25) தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும், ஒரு கிராம் ரூ.6,430 க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக இறங்கு முகத்தில் இருந்து வருகிறது.  அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.51,320க்கு விற்கப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 4நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது. 

 சென்னையில்  வெள்ளி விலை மாற்றமின்றி சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிந்து வருவது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வரும் நாட்களில் தங்கம் குறையும் எனக் கூறப்பட்டாலும், ஆடி பதினெட்டுக்குப் பிறகு தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.