மன்னிப்பு கோரிய பரிதாபங்கள் கோபி, சுதாகர்! புகார் மனு வாபஸ்
லட்டு பரிதாபங்கள் வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவிடம் மன்னிப்பு கேட்டனர் கோபி மற்றும் சுதாகர்.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவில், நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் பிரபல யூடியூபர்கள் கோபி - சுதாகரின் பரிதாபங்கள் சேனலில், ``லட்டு பரிதாபங்கள்" என்ற தலைப்பில் நேற்று ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனம் புண்படுவதாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து பரிதாபங்கள் குழு லட்டு பரிதாபங்கள் வீடியோவை யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கினர்.